Wednesday, 19 July 2017

இருமுகம்


இரவு 12 மணி, திடீரென்று தூக்கம் தெளிஞ்சது ஒரே புழுக்கம் கை தன்னால ஏசி ரிமோட்டை தேட அப்போதான் புத்திக்கு உறைச்சது நான் சென்னை வந்து மூணு நாள் ஆச்சு, இந்த வீட்ல ஏசி இல்லன்னு.
எழுந்து போய் பார்த்த பவர் கட். ஜன்னல் வழிய கீழ பார்த்தேன், குல்பி ஐஸ் விற்கிறவர் நைட் ஷிப்ட்ல இருந்தார்.
வீட்டை பூட்டிட்டு கீழ வந்தேன்.
"என்ன தம்பி ஏரியாக்கு புதுசா ?"
"ஆமாம் ணா", "இங்க பவர் சுட் அடிக்கடி நடக்குமா, எத்தனை மணிக்கு கரண்ட் வரும் ?"
"ஒரு குல்பி சாப்பிட்டு முடிங்க, அதுக்குள்ள கரண்ட் வந்துரும்.."
"வரலைனா ?"
"இன்னொரு குல்பி சாப்பிடுங்க.."
"ஹாஹாஹா"
முத குல்பி சாப்பிடும் போதே கரண்ட் வந்துடுச்சி.
மண்டைலையும் ஒரு பல்பு எரிஞ்சது, நிறைய லைப் ஹேக்ஸ் வீடியோல ஐஸ் கட்டி, டேபிள் பேனை வெச்சு ஏசி பண்ணுவாங்க. அத முயற்சி பண்ணலாம்னு ஒரு யோசனை தோணிச்சு.

"அண்ணா கொஞ்சம் ஐஸ் எடுத்துக்கறேன்.."
"தாராளமா எடுத்துக்கப்பா " அந்த நீல பெட்டியில இருக்குன்னு சொல்லி ஒரு சின்ன தம் இடைவேளைக்கு போனார்.
நீல பெட்டியில ஐஸ் குறைவா இருந்ததால, பக்கத்துல இருந்த சிவப்பு பெட்டியை தொறந்தேன், பயங்கர ஷாக், உள்ள ஐஸ் கட்டிகள் இருந்துச்சு கூடவே ஒரு பெரிய கத்தி.
நான் அந்த பெட்டியை மூடும் போதே அவர் வந்துட்டாரு, என்ன தம்பி நான் நீல பெட்டியில இருந்து தானே எடுத்துக்க சொன்னேன்.
நான் இன்னும் ஷாக் குறையாம, என்ன அண்ணா என்றேன்.
சும்மா ஒரு பாதுகாப்புக்கு தான் பா...
அவருடைய பல வருஷ ஃப்ளாஷ்பேக்கை ஒரு வரியில முடிச்சிட்டார், முன்னாள் தாதா இப்போ திருந்தி குல்பி ஐஸ் விற்கிறேன்.
ஆனா தொழில் செய்ய விடமாட்டாங்கப்பா, சம்பாதிக்கிற 100,200யும் ஆட்டயபோடுறாங்க. தெரிஞ்ச மூஞ்சின ஜகா வாங்கிடுவாங்க, தெரியாத புது கைங்க நம்ம கிட்ட வேலைய காட்டும்போது அவங்களுக்கு நாம யாருனு காட்டனும்ல அதுக்குத்தான்.
என் மூஞ்ச பார்த்துட்டு, என்ன இன்னும் நம்பலையான்னு கேட்டார்.
சரி, கிளம்பு ஒரு ரவுண்டு போலாம்னு சொன்னார், நானும் அதன் தீவிரம் தெரியாம கிளம்பிட்டேன்.
நான்கு தெரு தள்ளி, சரி நீ முன்னாடி போ நான் பின்னாடி வர்றேன். எதுவும் பிரச்சனைன்னா மணியை வேகமா ஆட்டு நான் வந்துறேன்னு சொல்லிட்டு மறைவா நடந்து வந்தார்.
ஒரு 100 அடி போயிருப்பேன், மூணு பேர் நிறுத்தி ஐஸ் கேட்டாங்க நானும் ரெகுலர் கஸ்டமர் போலன்னு 3 ஐஸ் கொடுத்தேன்.
"வசூல் எவ்ளோ ?"
"நீங்க தான் சார் மொத வியாபாரம் .." பெருமையா சொன்னேன்.
அதுல ஒருத்தன் கடுப்பாகி அடிக்க வந்துட்டான், நான் பதட்டத்துல மணியை அடிச்சுட்டேன்.
யாருக்குடா சிக்னல் தர்றன்னு இன்னொருத்தன் அடிக்க வந்தான். நான் டக்குன்னு சைக்கிள்ல இருந்து இறங்கிட்டேன்.
என்ன அடிக்க வந்தவங்க என் பின்னாடி அவரை பார்த்துட்டு நாலு அடி பின்னாடி போனாங்க.
நானும் திரும்பி பார்த்தேன், ஒரு நிழல், லுங்கி தூக்கிக்கட்டி, சிகெரெட் புகை, கெத்தா வந்து நின்னார், மெர்சலா இருந்தது.
மஹா ண்ணா நீங்கன்னு தெரியாதுன்னா மன்னிச்சுருங்க, நாங்க கிளம்பறோம்னு அவனுங்க சிட்டா பறந்துட்டானுங்க.
அவர் சொன்ன அர்த்தம் இப்போ புரிஞ்சது. 
சரி பத்திரமா வீட்டுக்கு போன்னு, கொஞ்சம் ஐஸ் கட்டிகள் குடுத்தார். நானும் வீட்டுக்கு வந்து படுத்துட்டேன்.
காலையில எழுந்திரிச்சு டீ குடிக்க போகும்போது எதிர்ச்சியா மஹா அண்ணனை பார்த்தேன், யாரோ அவரை நல்ல திட்டிட்டு இருந்தாங்க. அண்ண தலையக்கூட நிமிர்த்தல, நேத்து நைட் பார்த்த மஹாவா இது?.
பக்கத்துல இருந்த கடைல, ஒரு டீ சொன்னேன். மஹா என்னை பார்த்துட்டு நேர வந்தார்.

"யார்னா அவரு?, உங்களை இப்படி திட்றாரு, ஒரு காட்டு காட்டலாம்ல".
"டேய், அவரு என் முதலாளிடா, நைட் உன்கூட சுத்திட்டு சரியான வியாபாரமில்லை, அதனாலதான் திட்டு, தப்பு நம்ம மேலதான், எனக்கும் ஒரு டீ சொல்ற".
"எப்படி வேணும்னாலும் வாழலாம் டா, ஆனா இப்படி தான் வாழணும்னு வாழணும்".
டீ சாப்பிட்டுக்கிட்டே நியூஸ் பேப்பரை புரட்டினேன், தலைப்பு செய்தியாய் "சென்னை, இந்தியாவில் பாதுகாப்பான மெட்ரோ நகரம்".