Wednesday, 19 July 2017

இருமுகம்


இரவு 12 மணி, திடீரென்று தூக்கம் தெளிஞ்சது ஒரே புழுக்கம் கை தன்னால ஏசி ரிமோட்டை தேட அப்போதான் புத்திக்கு உறைச்சது நான் சென்னை வந்து மூணு நாள் ஆச்சு, இந்த வீட்ல ஏசி இல்லன்னு.
எழுந்து போய் பார்த்த பவர் கட். ஜன்னல் வழிய கீழ பார்த்தேன், குல்பி ஐஸ் விற்கிறவர் நைட் ஷிப்ட்ல இருந்தார்.
வீட்டை பூட்டிட்டு கீழ வந்தேன்.
"என்ன தம்பி ஏரியாக்கு புதுசா ?"
"ஆமாம் ணா", "இங்க பவர் சுட் அடிக்கடி நடக்குமா, எத்தனை மணிக்கு கரண்ட் வரும் ?"
"ஒரு குல்பி சாப்பிட்டு முடிங்க, அதுக்குள்ள கரண்ட் வந்துரும்.."
"வரலைனா ?"
"இன்னொரு குல்பி சாப்பிடுங்க.."
"ஹாஹாஹா"
முத குல்பி சாப்பிடும் போதே கரண்ட் வந்துடுச்சி.
மண்டைலையும் ஒரு பல்பு எரிஞ்சது, நிறைய லைப் ஹேக்ஸ் வீடியோல ஐஸ் கட்டி, டேபிள் பேனை வெச்சு ஏசி பண்ணுவாங்க. அத முயற்சி பண்ணலாம்னு ஒரு யோசனை தோணிச்சு.

"அண்ணா கொஞ்சம் ஐஸ் எடுத்துக்கறேன்.."
"தாராளமா எடுத்துக்கப்பா " அந்த நீல பெட்டியில இருக்குன்னு சொல்லி ஒரு சின்ன தம் இடைவேளைக்கு போனார்.
நீல பெட்டியில ஐஸ் குறைவா இருந்ததால, பக்கத்துல இருந்த சிவப்பு பெட்டியை தொறந்தேன், பயங்கர ஷாக், உள்ள ஐஸ் கட்டிகள் இருந்துச்சு கூடவே ஒரு பெரிய கத்தி.
நான் அந்த பெட்டியை மூடும் போதே அவர் வந்துட்டாரு, என்ன தம்பி நான் நீல பெட்டியில இருந்து தானே எடுத்துக்க சொன்னேன்.
நான் இன்னும் ஷாக் குறையாம, என்ன அண்ணா என்றேன்.
சும்மா ஒரு பாதுகாப்புக்கு தான் பா...
அவருடைய பல வருஷ ஃப்ளாஷ்பேக்கை ஒரு வரியில முடிச்சிட்டார், முன்னாள் தாதா இப்போ திருந்தி குல்பி ஐஸ் விற்கிறேன்.
ஆனா தொழில் செய்ய விடமாட்டாங்கப்பா, சம்பாதிக்கிற 100,200யும் ஆட்டயபோடுறாங்க. தெரிஞ்ச மூஞ்சின ஜகா வாங்கிடுவாங்க, தெரியாத புது கைங்க நம்ம கிட்ட வேலைய காட்டும்போது அவங்களுக்கு நாம யாருனு காட்டனும்ல அதுக்குத்தான்.
என் மூஞ்ச பார்த்துட்டு, என்ன இன்னும் நம்பலையான்னு கேட்டார்.
சரி, கிளம்பு ஒரு ரவுண்டு போலாம்னு சொன்னார், நானும் அதன் தீவிரம் தெரியாம கிளம்பிட்டேன்.
நான்கு தெரு தள்ளி, சரி நீ முன்னாடி போ நான் பின்னாடி வர்றேன். எதுவும் பிரச்சனைன்னா மணியை வேகமா ஆட்டு நான் வந்துறேன்னு சொல்லிட்டு மறைவா நடந்து வந்தார்.
ஒரு 100 அடி போயிருப்பேன், மூணு பேர் நிறுத்தி ஐஸ் கேட்டாங்க நானும் ரெகுலர் கஸ்டமர் போலன்னு 3 ஐஸ் கொடுத்தேன்.
"வசூல் எவ்ளோ ?"
"நீங்க தான் சார் மொத வியாபாரம் .." பெருமையா சொன்னேன்.
அதுல ஒருத்தன் கடுப்பாகி அடிக்க வந்துட்டான், நான் பதட்டத்துல மணியை அடிச்சுட்டேன்.
யாருக்குடா சிக்னல் தர்றன்னு இன்னொருத்தன் அடிக்க வந்தான். நான் டக்குன்னு சைக்கிள்ல இருந்து இறங்கிட்டேன்.
என்ன அடிக்க வந்தவங்க என் பின்னாடி அவரை பார்த்துட்டு நாலு அடி பின்னாடி போனாங்க.
நானும் திரும்பி பார்த்தேன், ஒரு நிழல், லுங்கி தூக்கிக்கட்டி, சிகெரெட் புகை, கெத்தா வந்து நின்னார், மெர்சலா இருந்தது.
மஹா ண்ணா நீங்கன்னு தெரியாதுன்னா மன்னிச்சுருங்க, நாங்க கிளம்பறோம்னு அவனுங்க சிட்டா பறந்துட்டானுங்க.
அவர் சொன்ன அர்த்தம் இப்போ புரிஞ்சது. 
சரி பத்திரமா வீட்டுக்கு போன்னு, கொஞ்சம் ஐஸ் கட்டிகள் குடுத்தார். நானும் வீட்டுக்கு வந்து படுத்துட்டேன்.
காலையில எழுந்திரிச்சு டீ குடிக்க போகும்போது எதிர்ச்சியா மஹா அண்ணனை பார்த்தேன், யாரோ அவரை நல்ல திட்டிட்டு இருந்தாங்க. அண்ண தலையக்கூட நிமிர்த்தல, நேத்து நைட் பார்த்த மஹாவா இது?.
பக்கத்துல இருந்த கடைல, ஒரு டீ சொன்னேன். மஹா என்னை பார்த்துட்டு நேர வந்தார்.

"யார்னா அவரு?, உங்களை இப்படி திட்றாரு, ஒரு காட்டு காட்டலாம்ல".
"டேய், அவரு என் முதலாளிடா, நைட் உன்கூட சுத்திட்டு சரியான வியாபாரமில்லை, அதனாலதான் திட்டு, தப்பு நம்ம மேலதான், எனக்கும் ஒரு டீ சொல்ற".
"எப்படி வேணும்னாலும் வாழலாம் டா, ஆனா இப்படி தான் வாழணும்னு வாழணும்".
டீ சாப்பிட்டுக்கிட்டே நியூஸ் பேப்பரை புரட்டினேன், தலைப்பு செய்தியாய் "சென்னை, இந்தியாவில் பாதுகாப்பான மெட்ரோ நகரம்".

Friday, 5 May 2017

போதைக்கு நான் அடிமை


இந்த உலகத்தில பொறந்த குழந்தையில இருந்து நாளைக்கு சாகப்போற பெரியவங்க வரைக்கும் ஏதோ ஒரு போதைக்கு அடிமையா இருக்காங்க. சிலர் மதுவிற்கு, சிலர் மாதுவிற்கு, சிலர் பணத்துக்கு இப்படி போதையில பல வகைகள் உண்டு. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு, என் சின்ன வயசுல மண் வாசனை எனக்குள்ள ஒரு போதையை ஏற்படுத்தும். மழை வந்த நான் தெருவுலதான் இருப்பேன், கொஞ்ச நாள்ல மண்ரோடும் இல்லை அப்புறம் மழையும் வர்றதில்லை. ஒவ்வொரு காலகட்டத்துல வெவ்வேறு போதைக்கு நான் அடிமையா இருந்தேன். அதுல ஒண்ணுதான் இந்த மீளா போதை. இதை நான் தெரிஞ்சு ஆரம்பிக்கல, யதார்ச்சையா நடந்த ஒரு விஷயம்.

நான் சென்னையில ஒரு ஐ.டி கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன், மாசம் 15000 ரூபாய் சம்பளம். அன்றைக்கு சம்பள நாள், நண்பர்கள் 4 பேர் இருக்காங்க, மொத்தம் 5 சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிட்டு போனேன். ரூமுக்கு போனபிறகு தான் தெரிஞ்சது ரெண்டு பேர் ஊருக்கு கிளம்பிட்டாங்கன்னு. மூணு பிரியாணியை முடிச்சிட்டு, மீதி ரெண்டை சாப்பிட வயித்துல இடமில்லை, தூக்கிப்போட மனசுலயும் இடமில்லை. என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிகிட்டே  ஒரு சின்ன நடை போனோம். எங்க தெருவுல ஒரு வயசான ஜோடி பிளாட்பாரத்துல இருப்பாங்க, அவங்க கிட்ட கேட்கலாம்னு தோணிச்சு.
"பாட்டி, சாப்பிட்டீங்களா ?"
ரெண்டுபேரும் தயக்கத்துடன் இருந்தாங்க, பதில் வரலை என்றாலும் அவங்க கண் பசியை காட்டிக்குடுத்துடுச்சு. நான் போய் ரெண்டு பிரியாணி எடுத்து வந்து  குடுத்தேன். பாட்டி தயங்கினாலும், வலுக்கட்டாயமாக திணிச்சோம். ரெண்டுபேரும் சாப்பிட ஆரம்பிச்சாங்க, நான் பக்கத்துல இருந்த டீ கடையில ஒரு தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்தேன். நான் தண்ணி பாட்டிலை அவங்க கிட்ட குடுத்துட்டு கிளம்பும்போது அவங்க என் கையை புடிச்சிகிட்டாங்க, சில கண்ணீர் துளிகள் கையில்பட்டது.
"என்ன பாட்டி, காரம் ஜாஸ்தியா..!! " தண்ணி குடிங்க சரியாயிடுமுன்னு சொன்னேன்.
"நல்லாயிருப்ப தம்பி'னு" என் தலையில கை வெச்சி சொன்னாங்க.
ஒரு நிமிஷம், சர்ர்றுன்னு  ஒரு வித போதை என் தலைக்கு ஏறிடுச்சு, ஒரு கர்வம்.
இந்த போதை எனக்கு எப்போவும் இருக்கணும்னு தோணிச்சு.

நானும் என் நண்பர்களும், ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சாப்பாடு போடலாம்னு முடிவெடுத்தோம். ஒரு சனிக்கிழமையா பார்த்து எல்லோருக்கும் காலை உணவு தயார் செய்தோம்.எல்லோரும் நிம்மதியா சாப்பிட்டாங்க, மனசு சந்தோசமா இருந்துச்சு.
அப்போ ஒரு சின்ன பையன்,
 ''அண்ணா, ரொம்ப தேங்க்ஸ்,
 வாராவாரம் எங்களுக்கு யாரோ ஒருத்தர் நல்ல சாப்பாடு குடுத்திடறாங்க,
ஆனா எங்களை யாரும் வெளிய கூட்டிட்டு போகமாட்டிங்கறாங்க.
எங்களை எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போறிங்களா ? " ன்னு கேட்டான்.

உடனே அவங்க மேனேஜ்மென்ட் கிட்ட பேசி பசங்களை MGM கூட்டிட்டு போக முடிவு பண்ணினோம். ஒரு வேன் ஏற்பாடு செஞ்சு, அவங்க இல்லத்துல இருந்து சில உதவியாளர்கள், அப்புறம் எங்க நண்பர்கள் சில பேர உதவிக்கு கூப்பிட்டுக்கிட்டோம். பசங்க MGM போனதும் ரொம்ப சந்தோசப்பட்டாங்க. அவங்க சந்தோசத்தை பார்க்க பார்க்க மறுபடியும் அந்த போதை எனக்கு தலைக்கேற ஆரம்பிச்சது. ராத்திரி ஒன்பது மணி, அவங்க எல்லோரையும் இல்லத்துல விட்டுட்டு வீடு வந்தோம்.

இப்படி போதையில சந்தோசமா இருந்த எனக்கு, திடீர்னு ஒரு தடுப்பு ஊசியாய் வந்தது இந்த வெளிநாடு அலுவல் பயணம். குடியே இல்லாத குடிகாரன் போல ஒரு நடுக்கம், அப்படி இப்படி சில வருஷம் கடந்துடுச்சு. இன்னும் மிக விரைவில் இந்தியா கிளம்பிடுவேன். களப்பணியில கிடைக்கிற சந்தோசம் காசு அனுப்புறதுல கிடைக்கிறதில்லை. களத்துல இறங்கி வேலை செஞ்சு, என்னை நானே திருப்தி படுத்திக்கபோறேன்.
மறுபடியும் அந்த மாய தேசத்துல கிடைக்கிற போதைக்காக காத்திருக்கிறேன்.

Wednesday, 1 March 2017

TASMAC என்கிற சாராயக்கடை


நானும் ஆர்த்தியும் காலை நாலு மணி கோவை பஸ் ஸ்டாண்ட்ல ஒரு ஆட்டோ பின்னாடி மறைஞ்சிட்டு இருந்தோம். எங்களை நாலு பேர் துரத்திட்டு இருக்காங்க, அவங்க கிட்ட நான் மாட்டினாலும் பரவாயில்லை ஆனா ஆர்த்தியை பஸ் ஏற்றி விட்றணும். நாங்க இருந்த இடம் நல்ல இருட்டு அதுவும் சாக்கடை பக்கத்துல, பயங்கர நாற்றம் ரொம்ப நேரம் அங்க இருக்க முடியாது. எங்களுக்கு ஒரு ஐம்பது அடி தள்ளி சேலத்துக்கு ஒரு பஸ் புறப்பட தயாரா இருந்துச்சு. நாங்க ஒரு முடிவு எடுத்தோம், பஸ்ஸுக்கு எதிர்திசைல நான் ஓட ஆரம்பிக்கணும், நான் கிளம்பி 20 நொடியில ஆர்த்தி பஸ்ஸை நோக்கி ஓடணும். எனக்கு அவளை பஸ் ஏற்றிவிட வேற வழி தெரியல. நான் ஒரு தடவை சுத்தி கவனிச்சேன், எங்களை துரத்திக்கிட்டு வந்தவங்க எங்க இருக்காங்கன்னு, என்னால எவ்ளோ வேகமா முடியுமோ அவ்ளோ வேகமா ஓட ஆரம்பிச்சேன், சரியா 20 நொடில நான் ஆர்த்தி கிளம்பிட்டாளானு உறுதிப்படுத்திக்க திரும்பிபார்த்தேன்..., நங்ங்ங்ங்ங்ங், ஒரு இரும்பு rod என் தலையை பதம் பார்த்தது.

பயங்கர இருட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் மயக்கத்தில்  இருந்து தெளிந்தேன்.அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த ஒரு எக்ஸாஸ்ட் காத்தாடியின் இடைவெளியில் வந்த நிலா வெளிச்சத்துல அது ஒரு பழைய இரும்புகடை கிடங்கு மாதிரி இருந்துச்சி, சுத்தியும் காலி பாட்டில்கள். என்  ரேடியம்  வாட்ச்ல மணி 9.15னு தெளிவா தெரிஞ்சுது. என் கவலையெல்லாம் ஆர்த்தி பஸ் ஏறி இருப்பாளான்னு தான். காலையில் தலையில் ஏற்பட்ட காயம் கொஞ்சம் வலிச்சது, ரத்தம் கசிஞ்சு அது உறைஞ்சு போயிருந்துச்சு. எனக்கு என் எந்த நிலைமை, நான் எப்படி இந்த பிரச்சனைக்குள்ள வந்தேன்.

நான் ஒரு IT எம்ப்லாய், வார இறுதியில SLRரும் கையுமா எங்கேயாவது கிளம்பிடுவேன். இந்த வாரம் ஊட்டியில பழைய பிரிட்டிஷ் பங்களாக்களை படம் எடுக்க வந்தேன்.ஒரு டீக்கடைல விசாரிச்சதுக்கு கவர்னர் சோழா ரோடு பக்கமா போனா ஒரு பழைய பங்களா இருக்குன்னு சொன்னாங்க, நான் நினைத்ததைவிட படு பயங்கரமா இருந்துச்சு. அப்போ அந்த வழியா சுள்ளி பொறுக்கிட்டு வந்த இரண்டு பசங்க என்னை அங்கே ரொம்ப நேரம் நிற்க வேணாம்னு எச்சரிச்சாங்க, ஏன் என்று கேட்டதுக்கு பதில் சொல்லாம ஓடிட்டாங்க.ஏற்கனவே இருட்டினதால நானும் காலையில வரலாம்னு கிளம்பிட்டேன், ஒரு நூறு அடி நடந்திருப்பேன் என்னை தாண்டி ஒரு ஜீப் அந்த பிரிட்டிஷ் பங்களாக்குள்ள போச்சு. நான்கு பேர் ஒரு சின்ன பொண்ணை தூக்கிட்டு போனாங்க,நான் கொஞ்சம் மறைவா இருந்து என்ன நடக்குதுன்னு பார்த்தேன். அந்த பொண்ணை உள்ளே வைத்து தாளிட்டு, இவங்க வெளியே வந்து ஏதோ பேசிட்டுருந்தாங்க, என்னானு சரியா கேட்கல. திடீர்னு அந்த நான்கு பேர்ல ஒருத்தன்," மச்சி பத்து மணிக்கு கடை மூடிருவாங்கடா"ன்னு கத்தினான். அவர்கள் அனைவரும் ஜீப்பில் பறந்தனர். நான் இதுதான் சரியான நேரம் என அந்த பங்களாவை இரண்டு மூன்று கோணத்தில் க்ளிக்கினேன். உள்ளே போய் அரைமயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை தோளில் தூக்கி கொண்டு அவர்கள் வருவதற்கு முன் அந்த இடத்தை விட்டு போய்விடவேண்டும் என்று வேகமாக ஓடினேன். நான் கேட்டை தாண்டும் பொழுது தூரத்தில் அந்த ஜீப் என் கண்ணில் பட்டது.நாங்கள் அருகில் இருந்த ஒரு உருளை கிழங்கு லோடு லாரியில் ஒளிந்து கொண்டோம்., அவர்கள் எங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை. லாரி கோவை போகிறது என்று தெரிந்துகொண்டு எங்களை கோவை பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிடுமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்டோம். நல்ல டிரைவர், எங்கள் நிலைமையை எடுத்து சொன்னதும் புரிந்து கொண்டார்.

அப்பொழுதுதான் அவள் சொன்னால், அவள் பெயர் ஆர்த்தி, ஏழாம் வகுப்பு, ஊர் சேலம், அப்பா அம்மா டாக்டர், பள்ளி சுற்றுலா வந்தபொழுது வழி தெரியாமல் இவர்கள் கையில் மாட்டிக்கொண்டால், பிறகு என்னை பற்றி சொல்லிவந்தேன். பஸ் ஸ்டாண்ட் வந்தடைய  விடியற்காலை 4 மணி, லாரியிலிருந்து இறங்கியவுடன் நாங்கள் அந்த நான்கு பேர் கண்ணில் மாட்டிக்கொண்டோம்.  அவர்கள் எங்களை தேடி கோவை வரை வந்துள்ளனர். அதற்குப்பிறகு என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரியுமே.

இப்போ நான் எப்படியாவது இங்க இருந்து தப்பிக்கணும், ஆர்த்தி என்ன ஆனா தெரியணும். எனக்கு ஒரு ஐந்து அடி தள்ளி ஒரு ஒடஞ்ச பாட்டில் இருந்துச்சு, அதைவைற்று என் கட்டுகளை அறுத்தெறிந்தேன். சிறு கதவு இடுக்கு வழியாக பார்த்தேன், நான்கு பேர் இருந்தனர். நான்கு பேரை என்னால் சமாளிக்கமுடியாது. என் கைப்பேசியும் பேட்டரி இல்லாமல் செயலிழந்திருந்தது. என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது மறுபடியும் அதே குரல்,"மச்சி பத்து மணிக்கு கடை மூடிருவாங்கடா"ன்னு ஒருவன் கத்தினான்.

நான் வெளியே வந்து ஒரு டீ கடையில் என் கைபேசிக்கு உயிர்க்குடுத்தேன். "Reached Home Safely", ஒரு குறுஞ்செய்தி புது எண்ணிருந்து வந்திருந்தது. நான் மன நிறைவுடன் பெங்களூருக்கு KPN'னில் பயணப்பட்டேன்.