இந்த உலகத்தில பொறந்த குழந்தையில இருந்து நாளைக்கு சாகப்போற பெரியவங்க வரைக்கும் ஏதோ ஒரு போதைக்கு அடிமையா இருக்காங்க. சிலர் மதுவிற்கு, சிலர் மாதுவிற்கு, சிலர் பணத்துக்கு இப்படி போதையில பல வகைகள் உண்டு. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு, என் சின்ன வயசுல மண் வாசனை எனக்குள்ள ஒரு போதையை ஏற்படுத்தும். மழை வந்த நான் தெருவுலதான் இருப்பேன், கொஞ்ச நாள்ல மண்ரோடும் இல்லை அப்புறம் மழையும் வர்றதில்லை. ஒவ்வொரு காலகட்டத்துல வெவ்வேறு போதைக்கு நான் அடிமையா இருந்தேன். அதுல ஒண்ணுதான் இந்த மீளா போதை. இதை நான் தெரிஞ்சு ஆரம்பிக்கல, யதார்ச்சையா நடந்த ஒரு விஷயம்.
நான் சென்னையில ஒரு ஐ.டி கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன், மாசம் 15000 ரூபாய் சம்பளம். அன்றைக்கு சம்பள நாள், நண்பர்கள் 4 பேர் இருக்காங்க, மொத்தம் 5 சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிட்டு போனேன். ரூமுக்கு போனபிறகு தான் தெரிஞ்சது ரெண்டு பேர் ஊருக்கு கிளம்பிட்டாங்கன்னு. மூணு பிரியாணியை முடிச்சிட்டு, மீதி ரெண்டை சாப்பிட வயித்துல இடமில்லை, தூக்கிப்போட மனசுலயும் இடமில்லை. என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிகிட்டே ஒரு சின்ன நடை போனோம். எங்க தெருவுல ஒரு வயசான ஜோடி பிளாட்பாரத்துல இருப்பாங்க, அவங்க கிட்ட கேட்கலாம்னு தோணிச்சு.
"பாட்டி, சாப்பிட்டீங்களா ?"
ரெண்டுபேரும் தயக்கத்துடன் இருந்தாங்க, பதில் வரலை என்றாலும் அவங்க கண் பசியை காட்டிக்குடுத்துடுச்சு. நான் போய் ரெண்டு பிரியாணி எடுத்து வந்து குடுத்தேன். பாட்டி தயங்கினாலும், வலுக்கட்டாயமாக திணிச்சோம். ரெண்டுபேரும் சாப்பிட ஆரம்பிச்சாங்க, நான் பக்கத்துல இருந்த டீ கடையில ஒரு தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்தேன். நான் தண்ணி பாட்டிலை அவங்க கிட்ட குடுத்துட்டு கிளம்பும்போது அவங்க என் கையை புடிச்சிகிட்டாங்க, சில கண்ணீர் துளிகள் கையில்பட்டது.
"என்ன பாட்டி, காரம் ஜாஸ்தியா..!! " தண்ணி குடிங்க சரியாயிடுமுன்னு சொன்னேன்.
"நல்லாயிருப்ப தம்பி'னு" என் தலையில கை வெச்சி சொன்னாங்க.
ஒரு நிமிஷம், சர்ர்றுன்னு ஒரு வித போதை என் தலைக்கு ஏறிடுச்சு, ஒரு கர்வம்.
இந்த போதை எனக்கு எப்போவும் இருக்கணும்னு தோணிச்சு.
நானும் என் நண்பர்களும், ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சாப்பாடு போடலாம்னு முடிவெடுத்தோம். ஒரு சனிக்கிழமையா பார்த்து எல்லோருக்கும் காலை உணவு தயார் செய்தோம்.எல்லோரும் நிம்மதியா சாப்பிட்டாங்க, மனசு சந்தோசமா இருந்துச்சு.
அப்போ ஒரு சின்ன பையன்,
''அண்ணா, ரொம்ப தேங்க்ஸ்,
வாராவாரம் எங்களுக்கு யாரோ ஒருத்தர் நல்ல சாப்பாடு குடுத்திடறாங்க,
ஆனா எங்களை யாரும் வெளிய கூட்டிட்டு போகமாட்டிங்கறாங்க.
எங்களை எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போறிங்களா ? " ன்னு கேட்டான்.
உடனே அவங்க மேனேஜ்மென்ட் கிட்ட பேசி பசங்களை MGM கூட்டிட்டு போக முடிவு பண்ணினோம். ஒரு வேன் ஏற்பாடு செஞ்சு, அவங்க இல்லத்துல இருந்து சில உதவியாளர்கள், அப்புறம் எங்க நண்பர்கள் சில பேர உதவிக்கு கூப்பிட்டுக்கிட்டோம். பசங்க MGM போனதும் ரொம்ப சந்தோசப்பட்டாங்க. அவங்க சந்தோசத்தை பார்க்க பார்க்க மறுபடியும் அந்த போதை எனக்கு தலைக்கேற ஆரம்பிச்சது. ராத்திரி ஒன்பது மணி, அவங்க எல்லோரையும் இல்லத்துல விட்டுட்டு வீடு வந்தோம்.
இப்படி போதையில சந்தோசமா இருந்த எனக்கு, திடீர்னு ஒரு தடுப்பு ஊசியாய் வந்தது இந்த வெளிநாடு அலுவல் பயணம். குடியே இல்லாத குடிகாரன் போல ஒரு நடுக்கம், அப்படி இப்படி சில வருஷம் கடந்துடுச்சு. இன்னும் மிக விரைவில் இந்தியா கிளம்பிடுவேன். களப்பணியில கிடைக்கிற சந்தோசம் காசு அனுப்புறதுல கிடைக்கிறதில்லை. களத்துல இறங்கி வேலை செஞ்சு, என்னை நானே திருப்தி படுத்திக்கபோறேன்.
மறுபடியும் அந்த மாய தேசத்துல கிடைக்கிற போதைக்காக காத்திருக்கிறேன்.